இந்திரன்
யாளி வெளியீடு 1982 இல் தொடங்கி கடந்த 40 ஆண்டுகளாக கவிதை, புனைகதை, ஓவியம்,சிற்பம், சினிமா ஆகிய துறைகளில் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில்பல நூல்களை வெளியிட்டு வருகிறது.மொழிபெயர்ப்பில் தனி கவனம் செலுத்தி ஆப்பிரிக்க, ஆப்ரோ- அமெரிக்க, ஆதிவாசி, தலித் எழுத்துக்களை தமிழில் வெளியிட்டு வருகிறோம். எங்கள் பதிப்பகத்தின் மூலமாக நூல் வெளியிடப்பட்ட இளம் கவிஞர்கள் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி பாடல் ஆசிரியர்களாகத் திகழ்கிறார்கள்.இந்தியாவின் ஒற்றுமையை வளர்க்கும் விதமாக இந்திய மொழிகளுக்குள் உரையாடலை உருவாக்கும் நோக்கத்துடன் பல இந்திய மொழிகளின் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வருகிறோம். எங்கள் பதிப்பகம் வெளியிட்ட ஒடிய மொழிக் கவிஞர் மனோரமா பிஸ்வால் மகாபத்ராவின்" பறவைகள் ஒருவேளை தூங்கிப் போய் இருக்கலாம்"கவிதை நூல் 2011க்கான சாகித்திய அகாடமி மொழிபெயர்ப்பு விருது பெற்றது. ஒடியா சாகித்திய அகாடமி யுடன் இணைந்து 20 ஒடிய கவிஞர்களின் படைப்புகளை தமிழ், ஒடியா,ஆங்கிலம் ஆகிய மும்மொழி புத்தகமாக நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். தமிழில் முதுபெரும் எழுத்தாளர் சின்னப்ப பாரதியின் "சங்கம்" எனும் நாவலையும், ஒடிய மொழி கவிதைகளையும் பிரேஞ்சு மொழியில் மொழிபெயர்த்து பிரான்சு நாட்டில் வெளியிட்டு இருக்கிறோம். ஓவியம், சிற்பக்கலை குறித்த நூல்களை தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிடுவதில் முன்னணி பதிப்பகமாக யாளி வெளியீடு திகழ்கிறது. போபாலில் உள்ள மனித குல அருங்காட்சியகத்துடன் இணைந்து தற்கால தமிழ்ப் பண்பாடு குறித்த கருத்தரங்கம் நடத்தி அதன் கட்டுரைகளை ஒரு நூலாக வெளியிட்டு இருக்கிறோம்.உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் பல்வேறு மொழி இலக்கிய படைப்புகளை மொழிபெயர்த்து பரிமாறிக் கொள்வதில் அக்கறை கொள்பவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம். எங்கள் பதிப்பகம் வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் படைப்புகளையும், சர்வதேச எழுத்தாளர்களின் படைப்புகளையும் அழகான புத்தகங்களாக வெளியிடுவதில் தனி கவனம்செலுத்தி வருகிறோம்.